ஏர் இந்தியா பங்குகளை விற்கும் முடிவை நிறுத்தி வைத்தது மத்திய அரசு

india

புதுடெல்லி,
ஏர் இந்தியா நிறுவனத்தின் பெருகி வரும் நிர்வாக செலவுகளும், லாபமற்ற வர்த்தக நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு அந்நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆனால், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உறுதியாக தெரிவித்தது.  ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது.
இதேபோல ஏர் இந்தியா சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 50% பங்குகளை விலக்கிக்கொள்வது தொடர்பான விளக்க அறிக்கையினையும் மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், பங்குகளை கோருவதற்கான காலக்கெடு முடிந்த பிறகும், எந்த நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை. இதனால், மத்திய அரசின் முயற்சி முதற்கட்டமாக தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஏர் இந்தியாவின் பங்குகள் முழுமையாக விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பல்வேறு ஊகங்கள் வெளியாகின.
இந்த நிலையில்,  மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், விமான போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ் பிரபு, போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி மற்றும் விமான போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதை தற்காலிகமாக கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் முன்னர் சில விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இவற்றை நிறைவேற்றிய பிறகே அடுத்த முறை ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.
அதற்குள், ஒரு லாபகரமான நிறுவனமாக ஏர் இந்தியாவை மாற்ற வேண்டும். இதற்காக, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்தவும் அதற்கு தேவையான நிதியை ஒதுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.