தீபாவளிக்கு போட்டிபோடும் அஜித், விஜய், சூர்யா, விஷால் படங்கள்

cinema

இந்த வருட தீபாவளிக்கு அஜித், விஜய், சூர்யா படங்கள் போட்டி போடுமெனத் தெரிகிறது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை தினங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாவது வழக்கம். அதன்படி, இந்த வருட தீபாவளி விடுமுறையில் அஜித், விஜய், சூர்யா ஆகியோரின் படங்கள் போட்டி போடலாமெனத் தெரிகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘தளபதி 62’. நாளை மறுதினம் (ஜூன் 22) விஜய்க்குப் பிறந்தநாள். எனவே, நாளை மாலை 6 மணிக்கு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட இருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் தொடங்கும்போதே தீபாவளி ரிலீஸ் என்று சொல்லித்தான் ஆரம்பித்தார்கள். ‘மெர்சல்’ படம் கடந்த வருட தீபாவளிக்கு ரிலீஸானதால், இந்த வருட தீபாவளிக்கு இந்தப் படத்தை வெளியிட்டே ஆகவேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் விஜய்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே.’ சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்தப் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று சொல்லித்தான் தொடங்கினார்கள். சமீபத்தில் நடைபெற்ற கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா அதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், இயக்குநர் செல்வராகவனும் தீபாவளி ரிலீஸை உறுதி செய்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்துவரும் படம் ‘விசுவாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மதுரையைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தின் ஷூட்டிங், ஹைதராபாத் மற்றும் ராஜமுந்திரியில் செட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படமும் தீபாவளி ரிலீஸ் என்று தலைப்பு அறிவித்தபோது சொன்னார்கள். ஆனால், திட்டமிட்டபடி ஷூட்டிங் தொடங்கவில்லை. எனவே, தீபாவளிக்கு ரிலீஸாகுமா என்று சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், தற்போது முழுவீச்சில் ஷூட்டிங் நடைபெற்று வருவதால், தீபாவளிக்கு ரிலீஸாகும் என்ற நம்பிக்கையுடன் அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படி மூன்று படங்களில் எது தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று தெரியாத நிலையில், விஷாலின் ‘சண்டக்கோழி 2’ படமும் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்திருக்கிறது எனத் தகவல் கிடைத்துள்ளது. லிங்குசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் முதலில் ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’ ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தீபாவளி விடுமுறைக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் விஷால்.

Leave a Reply

Your email address will not be published.