நீண்ட ஆயுளுடன் வாழ்க: ராகுலுக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து

india

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 48-வது பிறந்தநாள் இன்று அந்தக் கட்சியின் தொண்டர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடியும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றபின் கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் இதுவாகும். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கும்போது கடந்த 133 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கட்சி தேர்தல் மற்றும் அரசியல் ரீதியாக மிகவும் பலவீனமாக இருந்தது.

கடந்த 2004-ம் ஆண்டு தீவிர அரசியலில் ராகுல் காந்தி ஈடுபட்டு, அடுத்த 15 ஆண்டுகளில் வரும் 2019-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ளார். 2019-ம் ஆண்டு தேர்திலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால், பிரதமர் பொறுப்பை ஏற்கத் தயார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். இனிப்புகள் வழங்கியும், காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பிரதமர் மோடி ட்விட்டரில் விடுத்த செய்தியில், ”காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். ராகுல் காந்தியின் நீண்ட ஆயுளுக்கும், உடல்நலத்துக்கும் நான் பிரார்த்திக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் விடுத்த பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், ”காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் விடுத்த வாழ்த்துச் செய்தியில், ”ராகுல் காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களிடம் மிகச்சிறந்த தலைமைப் பண்பும், சிறந்த கண்ணோட்டமும் இருக்கிறது. உங்களின் இந்தப் பிறந்தநாளில், அமைதியும், ஆரோக்கியமும், வெற்றியும், மகிழ்ச்சியும் ஆண்டு முழுவதும் கிடைக்க வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.