ஹீரோவான ஹாரி கேன்; கடைசி நிமிட கோலால் டியூனிசியாவை வீழ்த்திய இங்கிலாந்து

sports

உலகக்கோப்பை 2018 கால்பந்து தொடரில் நேற்று டியூனிசியாவை இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிக்கணக்கைத் தொடங்கியது, ஹாரி கேன் 2 கோல்களையும் அடித்தார், அதிலும் குறிப்பாக கடைசி நிமிடங்களில் அடித்த ‘தலையால் முட்டிய கோல்’ அபாரமான கோல் மூலம் ஹாரி கேன் இங்கிலாந்தின் ஹீரோவானார்.

உலகக்கோப்பை மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்துத் தொடர்களில் 1950 முதல் 5 முறையே தங்களது தொடக்கப் போட்டியில் இங்கிலாந்து வென்றுள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்.

கடைசி நிமிடம் வரை 1-1 டிரா என்பது இங்கிலாந்துக்கு வலியை ஏற்படுத்தும் ஒன்று. 11வது நிமிடத்தில் ஹாரி கேன் முதல் கோலை அடிக்க கோலே போடாது என்று எதிர்பார்த்த நிலையில் டியூனிசியாவின் ஃபெர்ஜானி சஸி 35வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோல் அடித்து சமன் செய்தது இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது.

டியூனிசியாவின் சமன் செய்த கோல் இங்கிலாந்தின் பெருந்தன்மை என்றே கூற வேண்டும்.

மின்னல் வேகத்தொடக்கம்:

ஆட்டம் தொடங்கி முதல் 3 நிமிடங்களிலேயே இங்கிலாந்து 3 கோல்களை அடித்திருக்க வேண்டும், ஆனால் சுத்தமாக பினிஷிங் சரியில்லாமல் இருந்தது, முனைப்பற்ற தாக்குதல் ஆட்டமாக இருந்தது.

முதலில் ஹெண்டர்சனின் ஷாட் டியூனிசியா வீரர்களை ஊடுருவ டெலி ஆலி மின்னல் வேகத்தில் பந்தைக் கொண்டு செல்ல ஸ்டெர்லிங் சரியான இடத்துக்குச் சென்று காத்திருந்தார் ஆனால் டெலி ஆலி அடிப்பதற்கு முன் அங்கு டியூனிசிய வீரர்கள் குவிந்து விட்டனர். பந்து தடுக்கப்பட்டது.

பிறகு மீண்டும் டியூனிசிய வீரர் மாலூலிலிடமிருந்து பந்தை வென்றார் டெலி ஆலி, பந்து லிங்கர்டுக்கு கோலுக்கு 6 அடி இடைவெளியில் கிடைத்தது, அவர் அடித்தார் ஆனால் டியூனிசிய கோல் கீப்பர் ஹாசன் அபாரமாகப் பிடித்து விட்டார். பிறகு கார்னர் வாய்ப்பு உடனேயே கிடைத்தது மேகுவய்ரின் தலையால் முட்டிய பந்தை கோல் கீப்பர் வெளியே தட்டி விட்டார்.

5வது நிமிடத்தில் மீண்டும் டெலி ஆலி பந்தை விறுவிறுவென எடுத்துச் சென்று லிங்கர்டுக்குப் பாஸ் செய்தார். கோல் கீப்பர் முன்னால் வந்து லிங்கர்டைத் தடுக்கப்பார்க்க பந்தை ஸ்டெர்லிங்குக்கு அனுப்புகிறார், திறந்த கோல் வாய்ப்பை அவர் தவற விட்டார். 10வது நிமிடத்தில் ஸ்டெர்லிங்குடன் கூட்டிணைந்த ஹாரி கேன் வலது புறம் சென்று 25 யார்டிலிருந்து ஒரு ஷாட்டை அடித்தார், பந்து டுனிசிய வீரர் காலில் பட்டு வெளியே செல்ல கார்னர் வாய்ப்பு இங்கிலாந்துக்குக் கிடைத்தது. ஆஷ்லி யங்கின் கார்னர் ஷாட் வர ஜான் ஸ்டோன்ஸ் எம்பி தலையால் கோலின் இடது மேல் மூலைக்கு அடிக்க முயன்றார் கோல் கீப்பர் ஹசன் எப்படியோ தடுக்க முயன்ற போது பந்து ஹாரி கேனிடம் தள்ளி விட்டார், அருகிலிருந்து ஹாரி கேன் அதனை கோலாக மாற்ற இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றது.

ஆனால் இதன் பிறகு இங்கிலாந்தின் ஆரம்ப தீவிரம் மங்கத்தொடங்கியது. டியூனிசியா பந்தை தங்கள் வசம் அதிகம் வைத்திருந்து கோல் அருகே வந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தனர். இங்கிலாந்தின் தடுப்புவியூகத்துக்கு சற்றே நெருக்கடி ஏற்பட்டது. இப்படிப்பட்ட தருணத்தில் தான் டியூனிசியா வலது புறம் பந்தை வேகமாகக் கொண்டு சென்றது அங்கிருந்து பந்து பெனால்டி பகுதிக்குள் உதைக்கப்பட்டது அங்கு இங்கிலாந்து வீரர் கைல் வாக்கர் டியூனிசிய வீரர் ஃபாக்ரெடைன் பென் யூஸுப்பை முறையற்ற விதத்தில் கையால் தடுத்தார், சுத்தமாக அவரை மறித்தார், அது ஃபவுல்தான் என்று முடிவெடுக்கப்பட்டு டியூனிசியாவுக்கு பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது.

இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்ட் தயாரானார், டியூனிசியாவின் ஃபெர்ஜானி சாஸியும் கோல் அடிக்கத் தயாரானார், வலது மூலைக்குத் தாழ்வாக ஒரு கர்லிங் உதையை அவர் உதைக்க பிக்போர்ட் டைவ் அடித்தும் பயனில்லை. டியுனிசியா 33 வது நிமிடத்தில் சமன் செய்தது.

ஆனால் இங்கிலாந்து வீரர் கேனை இருமுறை பெனால்டி பகுதியில் பவுல் செய்தும் நடுவர் பெனால்டி கிக் கொடுக்கவில்லை. நடுவர்கள் இந்த உலகக்கோப்பையில் மோசமாக பல தீர்ப்புகளை வழங்குகின்றனர், அன்று அர்ஜெண்டினாவுக்கு எதிராக ஏகப்பட்ட தவறுகள், பிரான்ஸ், ஆஸ்திரேலியா போட்டியில் சொதப்பல், பிரேசில், சுவிஸ் போட்டியில் சுவிஸ் சமன் செய்த கோல் மிகப்பெரிய ஃபவுல், நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முறைகேடுகளையும் நடுவர் கண்டுகொள்ளவில்லை.. டெலி ஆலி காண்பித்த ஆரம்ப சூரத்தனம் போகப்போக மங்கியது.

இதனால்தான் இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து 4-5 கோல்களையாவது அடித்திருக்க வேண்டும். பினிஷிங் சரியில்லை. டியூனிசியா சமன் செய்வதற்கு முன்பாக இங்கிலாந்து முழு ஆதிக்கம் செலுத்தியது.

தொடக்க அரைமணி நேர இங்கிலாந்தின் ஆட்டத்திலேயே 4-5 கோல்களை அடிக்க வாய்ப்பிருந்தும் இங்கிலாந்து சொதப்பியது வரவிருக்கும் போட்டிகளில் பெரிய தலைவலையாக அந்த அணிக்கு இருக்கும்.

38 போட்டிகளில் ஆடிய ஸ்டெர்லிங்கின் ஆட்டம் திறம்பட இல்லை என்பதால் அவரை உள்ளே அழைத்து மார்கஸ் ரேஷ்போர்ட் களத்துக்கு அனுப்பப்பட்டார், அவர் உடனடியாகவே சிறப்பாக ஆடத்தொடங்கினார். ஓரளவுக்கு இங்கிலாந்து கோல் முயற்சிகளை மேற்கொண்டது ஆனால் பினிஷிங் நிச்சயம் சரியில்லை. கடைசியில் காயத்தினால் ஆட்டம் நிறுத்தப்பட்டதற்கான இழப்பீடு நேரத்தில் இங்கிலாந்து கார்னர் வாய்ப்பு பெற்றது. அதில் கேன் வெற்றிக்கான கோலை அடிக்க இங்கிலாந்து கடைசி நிமிடத்தில் 2-1 என்று வெற்றி பெற்றது.

ஆட்ட நடுவர்கள் சொதப்பல்கள்:

முதலில் டியூனிசியாவுக்கு சார்பாக அளித்த பெனால்டி கிக்கின் போது வாக்கரின் ஃபவுல் வீடியோ நடுவரிடம் கேட்கப்படவில்லை. கள நடுவர் ரோல்டானே பெனால்டி கிக் கொடுத்தார். ஆனால் வாக்கர் மிகவும் மடத்தனமாக அப்படியாடியது போல் தெரிந்தது, அதனால் அந்த பெனால்டி கொடுப்பு சரியே என்று உணரப்பட்டது.

இங்கிலாந்தின் கேன் இருமுறை ஃபவுல் செய்யப்பட்டு பெனால்டி பகுதியில் கீழே தள்ளப்பட்டார், அப்போதும் ஃபவுல் என்று நிர்ணயிக்கப்படவில்லை. அதே போல் இங்கிலாந்து வீரர் ஹாரி மெகுய்ர் ஒரு முறை டுனிசிய வீரரால் கடுமையாக கையாளப்பட்டார், அப்போதும் நடுவர்கள் வாளாவிருந்தனர்.

கையைப்பிடித்து இழுப்பது, வீரரை அப்படியே முதுகோடு சேர்த்துப் பிடிப்பது, கையால் நெட்டித் தள்ளுவது, கால்தட்டுப் போடுவது இந்த உலகக்கோப்பையில் பெனால்டி பகுதியில் அதிகம் நடக்கிறது.

இந்த உலகக்கோப்பையில் ஏறக்குறைய எல்லா போட்டிகளுமே நடுவர்கள் தவறிழைத்துள்ளனர், ஆனால் நேற்று இங்கிலாந்து அணியினர் உண்மையில் நடுவர்கள் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கருதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, கடைசி நேர கோலினால் இங்கிலாந்து வென்றதால் பிர்ச்சினையேற்படவில்லை, ட்ரா ஆகியிருந்தால் இங்கிலாந்து ஊடகங்கள் ஃபிபாவைப் போட்டி கிழிகிழி என்று கிழித்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.